![]() |
![]() |
![]() இவர் வீட்டுக்குப் போனபின் என்னைக் கொல்ல நாளைக்கே திரும்பி வரலாம்!
துப்பாக்கியை கீழே வைப்பதாகக் கூறுகிறார். சரி. ஆனால் நாளைக்கே உடலில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு இந்தப் பக்கம் வந்தால்?
Viruvirupu, Thursday 05 May 2011, 15:16 GMT
கண்கள் கட்டப்பட்ட நிலையில் ராணுவக் கூடாரத்துக்குள் அந்த முன்னாள் இளம் போராளி அமர்ந்திருந்தார். அதே கூடாரத்துக்குள் கிராமப் பெரியவர்கள் 17 பேர் அமரவைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் போராளியின் கண்களைக் கட்டியிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. அங்கு அமரவைக்கப்பட்டிருந்த கிராமப் பெரியவர்களின் கையெழுத்து மற்றும் இடது பெருவிரல் ரேகையுடன் (கைநாட்டு) கூடிய ஆவணம் ஒன்றைப் போராளியிடம் காண்பித்தார் அங்கிருந்த ராணுவ உயரதிகாரி. மேலே குறிப்பிடப்பட்ட சம்பவம் ராணுவ முகாம் ஒன்றில் நடைபெற்றாலும், உண்மையில் அது ஒரு தற்காலிக நீதிமன்றம். அங்கிருந்த ராணுவ அதிகாரி அமெரிக்க மரைன் கொமாண்டர் காப்டன் ஸ்காட் குமோ என்பவர்தான் தற்காலிக நீதிமன்றத்தின் நீதிபதி. இயக்கத்தில் நீங்களாக விரும்பி இணைந்தீர்களா?“நீங்கள் (முன்னாள் போராளி) தலிபான் இயக்கத்துக்கு சுயவிருப்பத்துடன் ஆதரவளித்ததில்லை என்றும், இனியும் தலிபான் இயக்கத்துக்கு ஆதரவாகப் போரிட மாட்டீர்கள் என்றும் உங்களது கிராமப் பெரியவர்கள் இந்தக் கடிதத்தின் மூலம் எமக்கு (அமெரிக்க ராணுவத்துக்கு) உறுதியளித்துள்ளனர். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார் காப்டன் ஸ்காட் குமோ. ராணுவ முகாமுக்குக் கண்கள் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த இளைஞரின் பெயர் ஜூமா கான். இவரது கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வழமையான ஒரு தேடுதல் நடவடிக்கையின்போது, இவரது வீட்டின் பின்புறத்தில் குண்டை வெடிக்கவைக்கும் சாதனம், வெடிப்பொருட்கள், ஓபியம் ஆகியவை புதைத்து வைக்கப்பட்டிருந்ததை அமெரிக்க ராணுவத்தினர் கண்டுபிடித்துக் கைப்பற்றியிருந்தனர். அதையடுத்தே ஜூமா கான் அமெரிக்க ராணுவத்தால் தலிபான் போராளி என அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது அந்த வெடிப்பொருட்கள் தலிபான் இயக்கத்துக்குச் சொந்தமானவைதான் என்பதை ஜூமா கான் ஒப்புக்கொண்டிருந்தார். தான் ஒரு தலிபான் போராளி என்பதையும் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் தலிபான் இயக்கத்தில் இவர் எப்படி இணைந்தார் என்பதில்தான் முரண்பாடு. ஜூமா கான் தனது சுயவிருப்பத்துடன் தலிபானில் இணைந்திருக்கவில்லை எனவும் தலிபான்களால் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பின் காரணமாகவே இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் எனவும் அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தில் அவர் வசித்த கிராமப் பெரியவர்களால் மனுக் கொடுக்கப்பட்டிருந்தது. மனுக் கொடுத்திருந்த கிராமப் பெரியவர்களில் கானின் தந்தையும் தாத்தாவும் அடங்குவர். அவர்களும் விசாரணையின்போது ராணுவ முகாமுக்கு வந்து அங்கு அமர்ந்திருந்தனர். தலிபான்கள் அதிகளவிலுள்ள பகுதியான ஹெல்மாண்ட் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பிரதான ராணுவ முகாமில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பையடுத்து ஜூமா கான் விடுவிக்கப்பட்டு, கிராமப் பெரியவர்களுடன் வீடு திரும்பினார். இவர் வீட்டுக்குப் போனபின் என்னைக் கொல்லவும் திரும்பி வரலாம்!இங்கு தீர்ப்பளித்த அமெரிக்க ராணுவ அதிகாரி, 42 வயதான காப்டன் குமோ, நியூயோர்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட, அரசியல் தொடர்பில்லாத குடும்பத்திலிருந்து வந்தவர். அதனாலோ என்னவோ, அரசியல் கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்படும் இப்படியான மேலோட்ட விசாரணைகளில் தீங்குகள் உள்ளன என்கிறார். “இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் மனங்களை வெல்ல அமெரிக்க அரசு மேற்கொள்ளும் ஒருவிதமான தந்திரம் இது” என்பதை ஒப்புக்கொள்கிறார் அவர். “இப்போது என்னால் விடுவிக்கப்பட்ட ஜூமா கான் வீட்டுக்குப் போனதும் எங்கள் பக்கம் சாய்வாரா அல்லது தலிபான்கள் பக்கம் சாய்வாரா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? ஒருவேளை நான் மறுபடியும் அவரைக் கைது செய்யும்வரை தெரிந்துகொள்ள இயலாது. சிலவேளைகளில் நாளைக்கே என்னைக் கொல்லும் மனித வெடிகுண்டாக இந்த ஜூமா கான் உடலில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்து சேரலாம்” என்றும் அவர் கூறினார். ஆனால், யாருடைய கருத்து எப்படியிருந்தாலும், ஜூமா கானிடம் நடாத்தப்பட்டது போன்ற விசாரணைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அமெரிக்க அரசு அரசியலுக்காக எடுத்திருக்கும் ரிஸ்க். தலிபான் இயக்கத்தில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட போராளிகளுக்கும் அமெரிக்க ராணுவத்துக்குமிடையே ஒரு நட்புறவை ஏற்படுத்தும் தங்களது திட்டம் குறித்து வாஷிங்டனும், காபூலும் விவாதித்து வருகின்றன. இந்த விடுதலை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும், போராளிகளை விடுவிக்கும் நடைமுறையில் இதில் சம்மந்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரே மகிழ்ச்சியாக இல்லை. இதற்கான காரணம் எளிமையானதுதான். காப்டன் குமோ கூறுவதைப் பாருங்கள். “நாங்கள் அமெரிக்கக் கடற்படையினர். தாக்குதல் நடாத்துவதற்கு மாத்திரமே பயிற்சி பெற்றவர்கள். நாங்கள் போரிடுவது குறித்து கவலைப்படமாட்டோம். அதுபற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், யுத்த வேலைகளுக்கு வெளியே இப்படியான அரசியல் வேலைகளில் எங்களுக்கு அனுபவம் கிடையாது. எங்களை வைத்துக்கொண்டு இப்படியான வேலைகளைச் செய்வதன்மூலம் இந்த நாட்டில் நிலையான தன்மையைக் கொண்டுவர முடியாது” என்கிறார். இவர்களும் ஆயுதமேந்தியவர்கள்!ஜூமா கான் விடுவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், வடக்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள சூர்கானோ கிராமத்தில் இரண்டு இளைஞர்களை மற்றொரு அமெரிக்கக் கடற்படைத் தளபதியான கேணல் பிரையன் கிரிஸ்மஸ் இதுபோன்றதொரு விசாரணையின்பின் விடுவித்தார். அமெரிக்கப் படையினர் மற்றும் தலிபான்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்துவரும் மார்ஜாவில், தலிபான்களுக்காகத் தாங்கள் ஆயுதமேந்திப் போரிட்டதை ஒப்புக்கொண்டவர்கள் இந்த இருவரும். அதனாலேயே கைது செய்யப்பட்டிருந்த அவர்கள், இனிமேல் போரில் இறங்க மாட்டார்கள் என அந்த கிராமப் பெரியவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த உறுதிமொழி வேண்டுகோளின் பேரில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்ட 25 முன்னாள் போராளிகள் மற்றொரு அமெரிக்க காப்டன் ஜேசன் பிரெஸ்லரிடம் ஒரு கோரிக்கை விடுத்தனர். “எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆயுதப் போராட்டம்தான். வேறு தொழில்களைச் செய்து வாழ முடியாது. எனவே எங்களை உங்களது பொலிஸ் பிரிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று இவர்கள் கோரியிருந்தனர். அதுபற்றிய முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. தலிபான்களில் கீழ்மட்டப் போராளிகளை ஆயுதங்களைக் கைவிட வைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுவரும் அமெரிக்க ராணுவத் தளபதிகள், “அவர்கள் எதற்காகப் போராளிகளாக மாறி ஆயுதங்களைக் கையில் எடுத்தனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களை விடுவித்த பின்னர், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அவர்களுக்குத் தேவையான எதையும் செய்து கொடுக்கவேண்டும். தீவிரவாத இயக்கத்தில் இருந்து வெளியேறியவர்களுடன் ஒன்றிணைந்துதான் தீவிரவாத இயக்கத்தை வெல்லமுடியும்” என்கின்றனர். கடந்த ஆண்டு, தலிபான் இயக்கத்தில் இருந்து வெளியேறி வருபவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, 9,000 போராளிகள் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டனர் என்று ஆப்கான் அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதில் எத்தனை பேருக்கு நிஜமாக வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்ற எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை. இயக்கத் தலைமையைக்கூட சரணடைய வைக்க முடியும்!முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு முயற்சிகளை மேற்பார்வையிடுவதில் உதவி வருபவரான பிரிட்டிஷ் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ரிச்சர்ட் பேரான்ஸ் ஒருபடி மேலேபோய் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். தலிபான் இயக்கத் தலைமையைக்கூட இப்படியான நடவடிக்கை மூலம் சரணடைய வைக்க அரசு நினைக்கிறது என்பதே அவரது கருத்து. “போராளிகளுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதன்மூலம் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா முகமது ஓமர், மற்றும் 1,000 உயர்மட்டத் தலைவர்கள் உட்பட, 40,000 போராளிகளை ஆயுதங்களைக் கைவிடவைக்க முடியும் என்று ஆப்கானிஸ்தான் அரசு கருதுகிறது” என்கிறார் அவர். ஆனால், அவ்வளவு பேருக்கும் மறுவாழ்வளிக்கும் திட்டங்கள் அரசிடம் இருக்கின்றதா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கின்றனர். இதுவரை எத்தனை தலிபான்கள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனர் என்ற துல்லியமான கணக்குத் தம்மிடம் இல்லை, முந்தைய ஆண்டுகளில் நடந்த போரின்போது ஆயுதங்களைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்த தெளிவான எண்ணிக்கைகூடத் தங்களிடம் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைந்தோரின் எண்ணிக்கை குறைவுதான். கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட காப்டன் குமோ, அமெரிக்கக் கடற்படையின் இரண்டாவது மரைன் ரெஜிமென்டில் உள்ள ‘கம்பெனி எஃப் படைப்பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் படைப்பிரிவு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் வந்து சண்டையில் ஈடுபடத் தொடங்கிய பின்னர், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட வீதியோரக் குண்டுவெடிப்புக்களில் 20 ராணுவத்தினர் கடந்த ஆண்டில் இந்தப் படைப்பிரிவிலிருந்து மாத்திரம் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டில் இதுவரையில் கம்பெனி எஃப் படைப்பிரிவிலிருந்து யாரும் கொல்லப்படவில்லை. மாறாகத் தலிபான்களை இவர்கள் கைது செய்தார்கள் அல்லது அவர்களை விடுவித்து வேலை அளித்தார்கள். அவர் இயக்கத்தில் இருந்தவரா?கம்பெனி எஃப்பைச் சேர்ந்த 270 படையினரும், 11 மைல் நீளமும், 5 மைல் அகலமும் கொண்ட நிலப்பரப்பில் ஹெல்மாண்ட் ஆற்றோரம் தொடர்ச்சியாக உள்ள கிராமங்களில் பரவியுள்ளனர். கிராம மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் இவர்களே தொடர்ந்து தினமும் இந்தப் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். கிராம மக்களுடன் சேர்ந்து தேநீர் அருந்துகின்றனர். போர்க்களத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்களை கிராம மக்களிடம் காட்டுகின்றனர். கிராமங்களில் தங்களது கண்களில்படும் இளைஞர்கள் பற்றி “அந்த இளைஞர் இயக்கத்தில் இருந்தவரா?” என்று தங்களது சந்தேகத்தை கிராமவாசிகளிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்வதுடன், தமது கண்களில் படும் புதியவர்களின் பெயர்களைத் தங்களது கணணியில் உள்ள பெயர்ப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கின்றனர். ராணுவத் தரப்பு இப்படியாகப் பொதுமக்களுடன் கலந்து பழகி அவர்களைத் தம்வசப்படுத்துவது ஒருபுறமாக நடந்தாலும், மறுபுறத்தில் தலிபான்கள் இவர்களைக் குறிவைப்பதும் நிற்கவில்லை. LATEST ON VIRUNEWS
|
VIRUNEWS UPDATES
|