![]() |
![]() |
![]() சி.ஐ.ஏ. ரகசிய ஆபரேஷன்: இந்த திருப்பத்தை எதிர்பார்த்திருக்க முடியாது!Viruvirupu, Tuesday 20 December 2011, 14:54 GMT
அத்தியாயம் 6
சி.ஐ.ஏ.யின் ரகசிய ஆபரேஷன்: U-2 (உளவு விமானம்) – Part 6
1960-ம் ஆண்டு மே, 1-ம் தேதி. சோவியத் ரஷ்யாவில் மே தின ஊர்வலங்களும், தொழிலாளர்கள் எழுச்சிக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று தேசிய விடுமுறை என்பதால் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. (ஆம். 60-களில் ரஷ்யாவில் தேசிய விடுமுறையின்போது விமான, ட்ரெயின், பஸ் போக்குவரத்துக்கள் எவையும் இயங்காது) எந்தவொரு விமான நடமாட்டமும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது ரஷ்ய வான்பரப்பு. ரஷ்யாவின் டையுரடாம் என்ற இடத்திலுள்ள ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் மையத்தில் ராடார்கள் எந்தவித விமான அசைவுகளையும் காட்டாமல் அமைதியாக இருந்தன. வழமையான ஒரு ஷிஃப்ட்டில் 20 பேர் வேலை செய்யும் அந்த மையத்தில், வெறும் இரண்டே இரண்டுபேர் அமர்ந்து சோம்பலாக ராடார் திரைகளைப் பார்த்தபடி இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் அமெரிக்காவின் யூ-2 உளவு விமானம் திருட்டுத்தனமாக ரஷ்ய வான் எல்லைக்குள் பிரவேசித்தது. பாகிஸ்தானின் பெஷவாரில் இருந்து கிளம்பி, நோர்வே நாட்டின் போடோவுக்கு மேலாகப் பறந்து, ரஷ்யாவின் பனிமலைகளுக்கு அருகே ஸ்வெட்லோவ்ஸ்க் ஊடாக ரஷ்ய வான்பரப்புக்குள் உட்புகுநடதது யூ-2. ரஷ்ய வானில் எந்தவித விமான அசைவுகளும் இல்லாத நிலையில் க்-2 விமானம் மிகத் தெளிவான ஒரு புள்ளியாக ரஷ்யர்களின் ராடாரில் தெரியத் தொடங்கியது. சோம்பலாக சாய்ந்திருந்த இரு ரஷ்ய ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்களும் துள்ளி எழுந்தனர். ராடாரில் தெரியும் புள்ளி யாருடைய விமானம் என்று அறிவதற்காக தமது சென்ட்ரல் கன்ட்ரோல் டவரைத் தொடர்பு கொண்டனர். இதற்கிடையே உளவுவிமானம் ஸ்வெட்லோவ்ஸ்க் அருகேயுள்ள அணுசக்தி மையத்துக்கு மேலாக 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியது. (சாதாரண பயணிகள் விமானம் பறப்பது 32,000-38,000 அடி உயரத்தில்) வாஷிங்டனில் அப்போது நேரம் காலை 10.30. வாஷிங்டன் ஹேய் ஸ்ட்ரீட்டில் அமைந்திருந்தது யூ-2 உளவு விமானத்தின் கட்டுப்பாட்டு மையம். (உளவு விமான ஆபரேஷன் முழுவதும் பிஸ்ஸலின் கைகளில் இருந்த காரணத்தால், அந்த நாட்களில் வாஷிங்டன் ராணுவ மட்டத்தில் இந்த மையத்தை பிஸ்ஸல் சென்டர் என்று அழைப்பார்கள்) அப்போது உளவு விமானம் தொடர்பான முதலாவது மெசேஜ் வந்தது. பெயர் குறிப்பிட முடியாத ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்த சி.ஐ.ஏ.-யின் ரகசிய கன்ட்ரோல் சென்டரில் இருந்து ரேடியோ மூலமாக வந்தது ஒரு வார்த்தையில் அந்தத் தகவல். “பில்லி பெய்லி வீட்டுக்கு வந்து சேரவில்லை” இந்தத் தகவல் வந்தவுடன் பிஸ்ஸல் சென்டர் பரபரப்பாகிவிட்டது. ‘பில்லி பெய்லி’ என்பது யூ-2 உளவு விமானத்தின் சங்கேதப் பெயர் என்பது பிஸ்ஸல் சென்டரில் இருப்பவர்களுக்குத் தெரியும். யூ-2 விமானம் அன்று காலை உளவு பார்ப்பதற்காக ரஷ்யாவுக்கு மேலாய் பறந்திருக்க வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தகவல் வந்தபோது பிஸ்ஸல் சென்டரில் டியூட்டி அதிகாரியாக இருந்தவர் பாப் கிங். பின்னாட்களில் பேட்டி ஒன்றில் பாப் கிங், தமக்கு தகவல் வந்த நிமிடம் பற்றி இப்படிக் குறிப்பிட்டார் – “ரேடியோவில் இந்தத் தகவல் மிகவும் தெளிவாக, அந்த அறையில் இருந்த அனைவருக்கும் கேட்குமாறு ஒலித்தது. அறையில் சுமார் 20 பேர் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். தகவல் வந்த அடுத்த விநாடி நிஜமான திகிலை அடி வயிற்றில் உணர்ந்தோம். ஒரு கனத்த மௌனம் அந்த அறையில் நிலவியது. அது ஒரே ஒரு விநாடிதான் நீடித்தது. மறு விநாடியே அங்கிருந்த அனைவரும் அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களை, தலைவெட்டப்பட்ட உடனே கோழி துடிப்பதுபோல பதறிப் பதறிச் செய்யத் தொடங்கினார்கள்.” விமானம் மிஸ்ஸிங் என்ற தகவலை பாப் கிங், யூ-2 ஆபரேஷனின் சீஃப் பிஸ்ஸலுக்கு உடனே தெரிவித்தார். பிஸ்ஸல் ஆபரேஷன் சென்டருக்கு வந்துசேர மதியமாகி விட்டது. வருவதற்கு முன்னர் சி.ஐ.ஏ.-யின் தலைமைச் செயலகத்தில் இருந்து சில தகவல்களை சேகரித்துக் கொண்டு வந்தார். அந்தத் தகவல்களின்படி, யூ-2 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவோ, வேறு ஏதாவது இடத்தில் எமர்ஜன்சி லேன்டிங் செய்ததாகவோ தகவல் இல்லை. அத்துடன் யூ-2 விமானத்தின் விமானி ஆபத்தைக் குறிக்கும் ஸ்ரெஸ் மெசேஜ் எதையும் தரையிலுள்ள எந்தக் கட்டுப்பாட்டு மையத்துக்கோ, அமெரிக்க விமானத் தளத்துக்கோ அனுப்பியதாகவும் தகவல் இல்லை. பிஸ்ஸல் ஆபரேஷன் சென்டருக்குள் பிரவேசித்தார். யூ-2 விமானத்தை வெறும் வரைபடத்தில் இருந்து உருவாக்குதலில் முழுமையாகச் செயற்பட்டு, அந்த விமானம் பெற்றுக் கொடுத்த உளவுத் தகவல்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் காட்டியதுவரை, இந்த ஆபரேஷனே முற்று முழுதாக பிஸ்ஸலின் குழந்தை. 24 மணிநேரமும் அவரது சிந்தனை இந்த உளவு விமானத்தில் இருந்த நாட்கள் அவை. அப்படியான நிலையில் இருந்த பிஸ்ஸல், யூ-2 விமானம் காணாமல் போனதை எப்படி எடுத்துக் கொண்டார்? இதோ, பாப் கிங் பின்னாட்களில் கொடுத்த பேட்டியிலுள்ள வாக்கியங்களைப் பாருங்கள் - “பிஸ்ஸல் ஆபரேஷன் சென்டருக்கு வந்தபோது, நாம் பதறியபடி இருந்தோம். ஆனால் அவரோ, எந்தவித பதட்டமோ படபடப்போ இல்லாமல் ஒரு சாதாரணமான திங்கட்கிழமை மாலை நடைபெறும் ஊழியர் கூட்டத்துக்கு வருவதுபோல வந்தார். ‘எல்லோருக்கும் மாலை வணக்கம். எமது யூ-2 உளவு விமானம் காணாமல் போய்விட்டது. அது அநேகமாக ரஷ்ய வான்பரப்பில் வைத்து ரஷ்யர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்’ என சர்வ சாதாரணமாகச் சொன்னார் – இன்று காலையில் பான்கேக் சாப்பிட்டேன் என்று சொல்வதுபோல!” “யூ-2 உளவு விமானம் 16 மில்லியன் அமெரிக்க டாலரில் (1960-களில் இது பெரிய தொகை) உருவாகிய திட்டம். விமானம் ரஷ்யர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது ஒரு இழப்புத்தான். ஆனாலும் 16 மில்லியன் டாலரைவிட அதிக பெறுமதியுள்ள உளவுத் தகவல்களை எங்களுக்கு ஏற்கனவே யூ-2 சேகரித்துக் கொடுத்திருக்கின்றது” என்றார் பிஸ்ஸல். “விமானத்தின் விமானி…” இழுத்தார் பிஸ்ஸலின் உதவியாளர்களில் ஒருவர். “நிச்சயமாக உயிர் தப்பியிருக்க மாட்டார். விமானத்துடன் சேர்ந்து அவரும் அழிந்திருப்பார். விமானத்தின் சிறிய பாகம்கூட ரஷ்யர்களின் கைகளில் சிக்கியிருக்க முடியாது ” என்றார் பிஸ்ஸல் ஒரு கர்ம வீரனைப் போல! மிகத் தவறான கணிப்பு! யூ-2 விமானத்தை அன்று ரஷ்ய வான்பரப்புக்கு செலுத்திச் சென்றிருந்த அமெரிக்க விமானப்படை விமானியின் பெயர் பிரான்சிஸ் கரி பவர்ஸ். அவர் இறந்திருப்பார் என்று பிஸ்ஸல் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் ரஷ்யாவில் லுப்யாங்கா என்ற இடத்தில் ரஷ்ய ராணுவத்தினர் சூழ்ந்திருக்க, உயிருடன் கைப்பற்றப்பட்ட நிலையில் இருந்தார்! யூ-2 உளவு விமானம் தாக்கப்பட்டு செயலிழந்து கீழே விழத்தொடங்கியபோது, பைலட் சீட்டுக்கு கீழே இருக்கும் சிவப்புநிற பெல்ட்டை பிரான்சிஸ் இழுக்க அவகாசம் கிடைக்கவில்லை. அதற்குமுன் விமானம் தலைகீழாக கீழே விழத் தொடங்கிவிட்டது. இதனால் விமானியின் சீட்டுக்குக் கீழுள்ள வெடிகுண்டு வெடித்து விமானியையும் விமானத்தையும் அழிக்கவில்லை. அதேபோல தரையில் விழுந்தவுடன் பிரான்சிஸ் மயக்கமுற்று விட்டதால், அவரது உடையில் இருந்த விஷம் தோய்க்கப்பட்ட ஊசியால் தனது உடலில் கீழி தற்கொலை செய்ய முடிந்திருக்கவுமில்லை. மயக்கம் தெளிந்து பார்த்தபோது பிரான்சிஸ் பவர்ஸ் ரஷ்யச் சிறையில் இருந்தார். அவர் மயக்கமாக இருந்தபோது அவரைச் சோதனையிட்ட ரஷ்யர்கள் அவரது உடையில் இருந்த விஷ ஊசியையும் கைப்பற்றியிருந்தார்கள். அது மாத்திரமல்ல; யூ-2 விமானத்தின் சில சிதைவடையாத பகுதிகளும் ரஷ்யர்களின் கைகளில் கிடைத்திருந்தன! (இதை நீங்கள் படிக்கும்போதுள்ள ஆச்சரிய விஷயம் ஒன்றைப் பார்த்தீர்களா? சி.ஐ.ஏ.-யின் முதலாவது உளவு விமானம் யூ-2 ரஷ்யர்களின் கைகளில் சிக்கி (1960) 51 ஆண்டுகளின் பின், கடந்த வாரம் அமெரிக்க லேட்டஸ்ட் உளவு விமானம் RQ-170 ஈரானியர்களின் கைகளில் சிக்கியுள்ளது. ஒரேயொரு வித்தியாசம், அநத நாளைய விமானத்தை செலுத்த ஒரு விமானி தேவைப்பட்டார். தற்போது உளவு விமானம் விமானி இல்லாமல் லேன்ட்-கன்ட்ரோலில் பறக்கிறது) விமானி கைப்பற்றப்பட்ட விஷயத்தை ரஷ்யா உடனடியாக வெளியே அறிவிக்கவில்லை. வாஷிங்டனுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுத்துப் பார்த்தது – அமெரிக்கர்கள் என்ன பொய் சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்பதற்கு! ரஷ்யா இதுபற்றி வாயே திறக்கவில்லை என்பதைக் கவனித்த அமெரிக்கா, தடாலடியாக ஒரு கட்டுக் கதையை இட்டுக்கட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமெரிக்கர்கள் வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் கூறப்பட்டிருச்தது-
இப்படி ஒரே போடாக போட்டுவிட்டது அமெரிக்கா. யூ-2 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மே 1-ம் தேதி. அதிலிருந்து 6 நாட்கள் மௌனமாக இருந்த ரஷ்யா 7-ம் தேதி வாய் திறந்தது. ரஷ்ய அதிபர் நிகிடா குருஷேவ் புரட்சிச் சதுக்கத்தின் மேடையில் ஏறி ரஷ்ய மக்களுக்கு ஒரு அறிவிப்பைச் செய்தார். “தோழர்களே. உங்களுக்கு ஒரு ரகசியத்தைக் கூறப்போகிறேன். எமது நாட்டுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்த அமெரிக்க விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியிருக்கின்றோம். விமானத்தை மாத்திரமல்ல, விமானியையும் கைப்பற்றியிருக்கிறோம். விமானி 100 சதவிகிதம் உயிருடன் எங்களிடம் இருக்கிறார்” என்றார் குருஷேவ். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. கைதேர்ந்த கதை-வசனகர்த்தா எழுதிய டயலாக் போல அருமையான விதத்தில் ஒரு விஷயத்தையும் சொன்னார். “அமெரிக்கர்கள் தம்மை டெக்னாலஜியில் முன்னேறியவர்கள் என்று பெருமையாகக் கூறுவார்கள். அப்படிப்பட்ட அமெரிக்கர்களின் தொழில் நுட்ப வளர்ச்சியை நான் இப்போது உங்களுக்கு காட்டப் போகின்றேன். இப்போது நான் காட்டப்போகும் பொருள்தான் அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் உச்சம்” என்று குருஷேவ் கூறியதும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு அவர் காண்பிக்கப் போகும் பொருளைப் பார்க்க தயாரானார்கள். குருஷேவ் காண்பித்தது, யூ-2 விமானத்தின் சிதைந்த பகுதியை என்று நினைக்கிறீர்களா? அல்லது, அந்த விமானத்தைச் செலுத்திய விமானியை என்று நினைக்கிறீர்களா? இரண்டுமே கிடையாது! குருஷேவ் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்து உயர்த்திக் காண்பித்தார்! அது, அமெரிக்க விமானி பிரான்சிஸ் பவர்ஸ்ஸின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட விஷம் தடவிய ஊசி. “தங்களுடைய நாட்டின் விமானியையே கொல்லுவதற்காக அமெரிக்கா கொடுத்து அனுப்பிய விஷம் தோய்ந்த ஊசி இது. வெட்கம், வெட்கம்” என்றார் குருஷேவ். வாஷிங்டன் திகைத்துப் போனது. அத்துடனும் நிறுத்திக் கொள்ளவில்லை குருஷேவ். தங்களால் உயிருடன் பிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி பிரான்சிஸ் பவர்ஸையும் பொதுமக்கள் முன்பு அழைத்து வந்து காட்டினார். “சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் வானிலை அவதானிப்பு விமானம் என்று சொல்கிறது அமெரிக்கா. ஆனால் இந்த விமானியோ அது உளவு விமானம் என்பதை ஒப்புக்கொள்கிறார். எனக்குத் தெரிந்தவரை அலன் டல்லஸ் (சி.ஐ.ஏ.-யின் அன்றைய தலைவர்) ஒரு வானிலை அவதானிப்பு நிபுணர் அல்ல” என்றார் குருஷேவ் கிண்டலாக. இறுதியில் வேறு வழியில்லாமல், ரஷ்ய வான்பரப்புமீது சுட்டு வீழ்த்தப்பட்டது சி.ஐ.ஏ.-யின் உளவு விமானம்தான் என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டது. அமெரிக்கா ஒப்புக்கொண்ட தினத்தில், தனது அலுவலகத்துக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி எய்சன்ஹோவர் “இந்த முட்டாள்தனமான யூ-2 உளவு விமான விவகாரத்தால் நான் பதவியிலிருந்து விலகப் போகின்றேன்” என்று கூறினார் என்றார் அவரது செயலாளர் ஆன் விட்மன் (ஆனால் பதவி விலகவில்லை). இந்த சம்பவத்தால் அமெரிக்காவும் ரஷ்யாவும் அரசியல் ரீதியாக நெருங்கிவருவது என்ற திட்டம் உடைந்து போனது. அமெரிக்க ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் பாரீஸ் நகரில் செய்து கொள்ளவிருந்த ஒப்பந்தத்துக்கான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது. அமெரிக்கா ரஷ்ய வல்லரசுப் போட்டி தொடர்ந்தது. பின் குறிப்பு - ரஷ்யர்களின் கைகளில் அகப்பட்ட அமெரிக்க விமானிக்கு என்ன நடந்தது? அதுகூட ஒரு சுவாரசியமான கதைதான். அதையும் ஓரிரு வரிகளில் சொல்லி விடுகிறோம். 1962-ம் ஆண்டு ரஷ்யாவின் அதி முக்கிய உளவாளி ஒருவர் பிரிட்டனிடம் அகப்பட்டார். அவரை விட்டுவிடும்படி ரஷ்யா பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுத்தது. இடையே அமெரிக்கா புகுந்து பிரிட்டிஷ் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க, ரஷ்யர்களிடம் இருக்கும் அமெரிக்க விமானியை விடுதலை செய்தால், ரஷ்ய உளவாளியை விடுதலை செய்வதாக பிரிட்டன் கூறியது. 1962-ம் ஆண்டு செப்டெம்பரில் கைதிப் பரிமாற்றம் நடைபெற்றது. விமானி பிரான்சிஸ் பவர்ஸ் அமெரிக்கா திரும்பினார். -உளவுத்துறை வட்டாரங்களில் பெறப்பட்ட குறிப்புகளுடன், ரிஷிLATEST ON VIRUNEWS
|
UPDATES
|