![]() |
![]() |
![]() மே 18 நினைவுகள்: பிரபாகரனின் ரகசிய தரையடி மாளிகை… அன்று!
பிரபாகரனின் வெவ்வேறு மறைவிடங்களை, உளவுத் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு குண்டு வீசிய இலங்கை விமானப்படை, இறுதிவரை புதுக்குடியிருப்பு பகுதி மறைவிடம் மீது குண்டு வீசவில்லை. காரணம், அந்த மறைவிடமே, உச்சக்கட்ட ரகசியமானதாக இருந்தது.
Viruvirupu, Friday 18 May 2012, 04:26 GMT
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் துவங்கியபோது, வன்னியில், மூன்று மாவட்டப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும், விடுதலைப்புலிகளின் ஆட்சி நிர்வாகம் நடைபெற்றது. யுத்தம் நடக்க, நடக்க, தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக கைவிட்டு புலிகள் பின்வாங்க நேர்ந்தது. ராணுவம் முதலில் மன்னார் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது. அதன்பின் கிளிநொச்சி மாவட்டம் ராணுவத்திடம் வீழ்ந்தது. இறுதி யுத்தம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் முடிந்தது. மூன்று மாவட்டங்களில் புலிகளின் ஆட்சி இருந்தாலும், பிரபாகரன் பெரும்பாலும் வசித்தது, முல்லைத்தீவு மாவட்டத்தில்தான். பிரபாகரனின் பாதுகாப்பான மறைவிடங்கள், எல்லாம் அங்குதான் இருந்தன. இறுதி யுத்தம் துவங்கி, ராணுவம் மன்னாரில் இருந்து நகரத் துவங்கியபின் பிரபாகரன், முல்லைத்தீவு மாவட்டத்தை விட்டு வெளியே செல்லவே இல்லை. விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகர் என்று அழைக்கப்பட்ட கிளிநொச்சிக்குகூட யுத்தம் துவங்கியபின் அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்லவில்லை. காரணம், பிரபாகரனை அவரது மறைவிடத்தில் வைத்து குண்டுவீசி கொல்வதற்காக, இலங்கை விமானப்படை விமானங்கள் சுற்றிக் கொண்டு இருந்தன. பிரபாகரனின் சில மறைவிடங்கள், விமானக் குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகின. குண்டுவீச்சுக்கள் நடைபெற்ற போது, அந்த இடங்களில் அவர் இருக்கவில்லை. வேறு ஒரு இடத்துக்கு மாறிவிட்டிருந்தார். குண்டுவீச்சு ஒரு மறைவிடத்தில் நடைபெற்றபோது, சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அங்கிருந்து வேறு ஒரு மறைவிடத்துக்கு சென்றதால், மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். அதன்பின் பிரபாகரன் பெரும்பாலும் தங்கியிருந்தது, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில்தான். பிரபாகரனின் வெவ்வேறு மறைவிடங்களை, உளவுத் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு குண்டு வீசிய இலங்கை விமானப்படை, இறுதிவரை புதுக்குடியிருப்பு பகுதி மறைவிடம் மீது குண்டு வீசவில்லை. காரணம், அந்த மறைவிடமே, உச்சக்கட்ட ரகசியமானதாக இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகம் செய்யப்பட்டிருந்தது. தரைக்கு மேலே சிறிய வீடு. புதிய வீடுகூட அல்ல. அதிகம் பராமரிக்கப்பட்டிராத சாதாரண வீடு. அதைச் சுற்றி உயரமான மரங்கள். அந்த வீட்டுக்கு உள்ளே போனால், வழமையான வீடு போல முன்கட்டு, ஹால், ஒரு ரூம். அந்த ரூமுக்கு அருகே கீழ்நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள். படிக்கட்டுகளில் இறங்கினால், தரைக்கு கீழே, மூன்றடுக்கு மாளிகை. விடுதலைப் புலிகளின் யுத்தம் முழுவதையும் அங்கிருந்தபடியே நடத்தும் உத்தரவுகளை கொடுக்கும் வசதிகள். ஆபரேஷன் ரும். தரையடி கார் பார்க், முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டால், பிரபாகரன் அவர்களது உடல்களுக்கு இறுதி மரியாதை செய்ய ஒரு மண்டபம், பிரபாகரன் துப்பாக்கி சுட்டு பயிற்சி செய்ய ஒரு இடம், பிரபாகரன் ஜாகிங் செய்யும் ட்ராக்.. இதுதான் பிரபாகரனின் பிரதான மறைவிட இல்லம். உளவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோக்களில் சிறியதாக ஒரு வீடுதான் தெரியும். சட்டலைட் போட்டோக்களில் அதுகூட தெளிவாக தெரியாது. அந்த சிறிய வீட்டுக்கு கீழே, மூன்றடுக்கு மாளிகை (வீடு இருந்த தளத்தையும் சேர்த்தால் 4 அடுக்கு) இருந்ததை யாராலும் ஊகிக்க முடிந்திருக்கவில்லை. குண்டுவீச பறந்து கொண்டிருந்த விமானப்படை விமானங்களுக்கு, ஒருதடவைகூட பிரபாகரனின் புதுக்குடியிருப்பு வீட்டின்மீது சந்தேகம் எழவில்லை. கிளிநொச்சி மாவட்டம் வீழ்ந்தபின், முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளை ராணுவம் ஒவ்வொன்றாக கைப்பற்றியபடி நகர்ந்து வந்தபோது, பிரபாகரன் தங்கியிருந்தது, அந்த வீட்டில்தான். புலிகளின் தளபதிகளுக்கு உத்தரவுகள் சென்று கொண்டிருந்ததும் அங்கிருந்துதான். மிக நெருக்கமான ஓரிரு தளபதிகளை தவிர, மற்றைய தளபதிகளைகூட பிரபாகரன் அந்த வீட்டில் வைத்து சந்திக்கவில்லை. அந்தளவுக்கு புதுக்குடியிருப்பு தரையடி மாளிகை பற்றி ரகசியம் காக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு வன்னிக்குள் இருந்து கிடைத்த உளவுத் தகவல்கள் ஏதும், இந்த வீடு குறித்து சொன்னதில்லை. வெளிநாட்டு உளவுத்துறைகளில் இருந்து கிடைத்த சட்டலைட் படங்கள் ஏதும், இந்த வீட்டைக் காட்டியதில்லை. ஒவ்வொரு இடமாக கைப்பற்றிக்கொண்டு நகர்ந்து வந்த ராணுவம், விசுவமடு என்ற இடத்தையும் கைப்பற்றிய தகவல் கிடைத்த பின், இந்த வீட்டில் இருந்து வெளியேறினார் பிரபாகரன். காரணம், விசுவமடுவில் இருந்து இந்த வீடு அமைந்துள்ள பகுதி அதிக தூரமில்லை. அடுத்த சில தினங்களில் வீடு இருந்த பகுதி வீழ்ந்துவிடும் என்ற நிலையில், இந்த தரையடி மாளிகையை கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டது. விசுவமடு பகுதி முழுமையாக ராணுவத்திடம் வீழ்ந்தபோது, பிரபாகரனின் குடும்பத்தினரும் அதே வீட்டில்தான் தங்கியிருந்தனர். பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த தரையடி மாளிகையை விட்டு வெளியேறியபோது, அவசரத்தில் அனைத்துப் பொருள்களையும் தம்முடன் எடுத்துச் செல்ல முடிந்திருக்கவில்லை. அவர்கள் வெளியேறி சில மணி நேரத்தில் அந்தப் பகுதி முழுவதையும் ராணுவம் கைப்பற்றியது. ராணுவத்தின் தேடுதலின்போது, இந்த வீடு அகப்பட்டது. வீட்டுக்குள் இருந்து பிரபாகரன் குடும்பத்தினர் விட்டுச் சென்ற பொருட்களும் கிடைத்தன. அதில்தான், பிரபாகரன் குடும்பத்தினரின் போட்டோ ஆல்பங்கள் ராணுவத்துக்கு கிடைத்தன. பிரபாகரனின் மனைவி, மகள், இரு மகன்களின் போட்டோக்களை, யுத்தத்தின் இறுதி நாட்களின்போது ராணுவம் வெளியிட்டது. அந்த போட்டோக்கள் அடங்கிய ஆல்பங்கள் இங்கிருந்துதான் கிடைத்தன. 2009-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதியே விசுவமடு டவுன் ராணுவத்திடம் வீழ்ந்துவிட்டது. ஆனால், விசுவமடுவின் மற்றைய பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ஏப்ரல் 1-ம் தேதி பச்சப்புல்மோட்டை என்ற கிராமம் வீழ்ந்தது. அங்கிருந்து அடுத்த இலக்காக புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி ராணுவம் நகர்ந்தது. பிரபாகரனின் வீடு இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை காத்து நின்ற புலிகளால், ராணுவத்தை 4 தினங்கள் மட்டுமே தடுத்து நிறுத்த முடிந்தது. ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவுக்குப்பின் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் தரையடி மாளிகையில் இருந்து வெளியேறி, முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றனர். 2009-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷனும், 58-ம் டிவிஷனும், புகுக்குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, முழுமையாகக் கைப்பற்றின. தரையடி மாளிகை இருந்த பகுதி முழுமையாக ராணுவத்தின் வசம் வந்தது. அதன்பின் பிரபாகரனோ, அவரது குடும்பத்தினரோ தாம் வசித்த அந்த வீட்டுக்கு வரவே இல்லை. இன்று பிரபாகரனின் புதுக்குடியிருப்பு தரையடி மாளிகை, ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது. LATEST ON VIRUNEWS
|
UPDATES
|